வியாழன், 18 ஜூன், 2009

போரும் வாழ்வும்
- கௌதம சித்தார்த்தன்

கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் நடந்து கொண்டிருந்த போர்ச்சூழல் முடிவுக்கு வந்திருக்கிறது. சர்வதேச விடுதலைப் போராட்ட வரலாற்றில் வேறு எந்த இனமும் சந்திக்காத கொடூரமான வாழ்வியலை ஈழத்தமிழர்கள் எதிர் கொண்டனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. போர்விதிகளை முற்றாகக் காலில் போட்டு மிதித்து இந்த மனிதப் படுகொலைகளை முன் கையெடுத்து நடத்தியிருக்கிறது ராஜபக்சேவின் இலங்கை அரசு. தமிழ்நாட்டின் சொந்தச் சோதரர்கள் கையறு நிலையில் கண்களை மூடிக் கொள்ள, உலக இனமே வேடிக்கை பார்க்க துடிக்கத் துடிக்க இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.இந்தியாவில் தமிழ் மக்களைத் தவிற, பிறமொழி பேசும் மக்கள் பெரிதாக இதைக் கண்டு கொள்ளவில்லை என்பதன் பின்னாலுள்ள அரசியல் குறித்தெல்லாம் நிறைய எழுதலாம். உலகின் ஏதோ ஒரு துண்டு நிலத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்ற போராளிகளும், மாற்று அரசியல் சிந்தனையாளர்களும் கூட குரல் கொடுக்கிறார்கள். குர்து இனத்துப் போராளி ஷெக்ஸ்முஸ் இமெட் இந்தத் தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம் ஏன்று அறைகூவல் விடுக்கிறார்.தேசபக்தி ஏன்கிற பெயரில் வரலாறு நெடுகிலும் அந்தந்த நாட்டுக்கான சுயநல விஷமக்கருத்துக்கள் கட்டமைந்து கொண்டு தானிருக்கின்றன - இருக்கும். இந்தியாவை விடுங்கள். அரசியல் வானில் ஓரு செந்தாரகையாகத் தோன்றிய மாவோ உருவாக்கிய செஞ்சீனம் தனது நாட்டின் பச்சையான சுயநலம் கருதி இந்த விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு எல்லாவித உதவிகளும் செய்து வந்ததை வரலாறு அறியும். அப்படியெனில் இந்த நாடு பேசும் பொதுவுடைமைக் கொள்கை என்பதுதான் என்ன?தன் சுயநலத்திற்காக ஒரு இனத்தை அழித்து அம்பாந்தோட்டையில் ராணுவத்தளவாடம் அமைப்பது தானா? சீன பௌத்தத் துறவிகள் பயங்கரவாத ஒழிப்புத் திலகம் என ராஜபக்சேவுக்கு விருது தருகின்றனர் என்றால் தர்மம் சரணம் கச்சாமி என்பதன் பொருள்தான் என்ன? இலங்கை அரசு பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி விட்டதென பாராட்டுப் பெறும் தீர்மானத்தை வழி மொழியும் நாடுகள் வரிசையில் புரட்சித் தலைவன் பிடல் காஸ்ட்ரோவின் க்யூபா இடம் பெற்றிருக்கின்றது. அப்படியெனில் க்யூபா நடத்திய போராட்டத்திற்குப் பெயர் என்னவென்று சொல்வது? என்னதான் புலிகளின் மீது விமர்சனமும் கருத்து முரன்பாடுகளும் இருந்தாலும் நடக்கும் மனிதப் படுகொலைகளுக்கு எதிரான வரிசையில் எப்படி நமது உலக காம்ரேட்கள் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பதுதான் புதிர்.கலை இலக்கியத்தில், உலக அரங்கில் மனித இனத்தின் மீது காட்டுகின்ற கரிசனம் வேறு. யதார்த்தத்தில், உலக அரசியல் தளத்தில் மனிதத்தின் மீது காட்டுகின்ற கோரம் வேறு.மனிதனின் இருப்புநிலையையும் மனித வாழ்வியலின் அர்த்தம் பொதிந்த காலடிச் சுவடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருப்பது கலை இலக்கியம் என்றால், கணக்கிலடங்கா சிக்கல் சிடுக்குகளில் மாட்டிக் கொண்டு எல்லாப் பாதைகளும் அதிகாரத்தை நோக்கியே என்று ரத்தச்சுவடுகளைப் பதிக்கவல்லது அரசியல். இதில் நீதி அநீதி, நேர்மை கயமை, நல்லது கெட்டது போன்ற சொற்களுக்கு எந்த மதிப்பீடும் இல்லை.உலக அளவில் போர் ஏற்படுத்திய இழப்புகள் குறித்த பதிவுகள் பேரிலக்கியங்களாக மலர்ந்தது அந்தக்காலம். இப்போது நடந்து கொண்டிருப்பது பின்நவீனத்துவக் காலம். எது நேர்மையானது எது நேர்மையற்றது என்பதற்கெல்லாம் எவ்வித மதிப்பீடுகளுமில்லாமல் போய்விட்டன. சிங்களனைப் பொறுத்தரை தமிழன் பயங்கரவாதி; தமிழனுக்கோ சிங்களன் இனப்படுகொலைகாரன். தேசபக்தி என்னும் அச்சுச் சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் உலக நாடுகளின் வரைபடத்தின் மீது இந்தப்புதிர் சிரித்துக் கொண்டிருக்கிறது.அந்தப் புதிர்வழிச்சுழலின் வரலாற்றுப் பக்கங்கள், உலக அரசியலில் காய்நகர்த்தும் சதுரங்க விளையாட்டில் ஏகாதிபத்தியம் என்று பெயர் பெற்ற அமெரிக்காவையும் ஐக்கிய நாடுகளையும் எதிரணியில் உட்கார வைத்திருப்பதுதான் வேடிக்கை.தங்களது ராணுவத்தளவாடங்களை அமைக்க, அண்டைநாட்டை அச்சுறுத்த இலங்கையை பகடைக் காயாக சதுரங்கமாடிக் கொண்டிருக்கின்ற உலக அரசியலில் தமிழ்இனப் போராட்டங்களும் - படுகொலைகளும் பல்வேறு பிரதிமைகளாகச் சுழன்று கொண்டிருக்கின்றன.இறுதியாக நான் கேட்கும் எளிய கேள்வி இதுதான்: விடுதலைப் போராட்டம் என்றால் என்ன, பயங்கரவாதம் என்றால் என்ன...? தத்தமது அரசியல் சுயலாபங்களுக்காக வரலாற்றுப்புகழ் மிக்க கொள்கைகளையும் அறநெறிகளையும் திரிக்கும் செயல்பாடுகள் என்பது என்ன...? தேசம், தேசபக்தி என்பது என்ன...? எனில், போர் என்பது என்ன?வாழ்வு என்பது என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக