திங்கள், 21 அக்டோபர், 2024

கொஞ்சம் சட்டம்; கொஞ்சம் அனுபவம்-1




இங்குதான் வரவேண்டுமா?

 வழக்கறிஞர்  ஆ. தமிழ்மணி


மே மாதம் பெற்றோர்களுக்கு இரண்டாவது பிரசவகாலம்.

தங்கள் பிள்ளைகள் பள்ளி இறுதி ஆண்டைக் கடக்கும்போதுஅடுத்து என்ன செய்வது?’ என்ற கேள்வி ஒவ்வொரு பெற்றோரையும் நிம்மதி இழக்கச் செய்துவிடுகிறது. பெற்றோரின் வலியை என்னால் அப்போது உணர முடிந்திருந்தது. தொழிற்கல்வியில் சேர்வதா? கலை, அறிவியல் கல்லூரியில் சேர்வதா?. குழப்பம் மாதக்கணக்கில் நீடித்தது.

நீண்ட பரிசீலணைக்குப் பிறகு ஏதாவது ஒரு கலை அறிவியல் கல்லூரியில் டிகிரி சேர்வது என்று முடிவெடுத்திருந்தேன். நான் முடிவெடுத்து கல்லூரியில் சேர்வதற்காக முயன்றபோது, கல்லூரியில் சேர்வதற்கான காலம் முடிந்து வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

1995-ஆகஸ்டு கடைசி வாரம். மணப்பாறையில் உள்ள குறிஞ்சி கலை அறிவியல் கல்லூரிக்கு அப்பா அழைத்துச் சென்றார். மேனேஜர் சந்திரசேகரைச் சந்தித்தோம்.

எந்த வகுப்பில் சேர்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

எதைக் கொடுத்தாலும் படிக்கிறேன் சார்என்றேன். இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைதான் அப்போது இருந்தது. கல்லூரி வகுப்புகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், எதில் சேர்ந்தாலென்ன?

மேனேஜர் அங்கும் இங்கும் போனார். கடைசியில்மைக்ரோபயாலஜியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். பயாலஜியைத் தாண்டி மைக்ரோபயாலஜி என அப்போதுதான் கேள்விப்பட்டேன். காலதாமதாமாக வந்ததற்காக ரெண்டாயிரம் ரூபாய் நன்கொடை கட்ட வேண்டும் என்றார். கட்டினோம். எனக்கான வருகைப்பதிவேடு முன்தேதியிட்டு போடப்பட்டது.

எந்தவித முன் விருப்பமும் இல்லாமல் சேர்ந்த பிரிவு என்றாலும், மைக்ரோபயாலஜி விருப்பமான பாடமாகவே இருந்தது. தனியார் கல்லூரி என்றாலும்கூட அரசுக் கல்லூரியைப் போலவே போராட்டமும், கதையுமாக சுவாராஸ்யமாகத்தான் வகுப்புகள் நகர்ந்தன.

பள்ளி நாள்களில் வானொலியில் செய்தி கேட்கும் பழக்கம் இருந்தது. மாநிலச் செய்திகளைவிட டெல்லியில் இருந்து ஒலிபரப்பாகும் அகில இந்திய செய்திதான் எனக்கு விருப்பமாக இருந்தது. “ஆக்காஸவானி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி இந்தக் குரல் என்னை வெகுவாக ஈர்த்திருந்தது. உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்கும். அந்தக்குரல் ஆணா? பெண்ணா? என்று திடீர் சந்தேகம் வந்துவிட்டது. அகில இந்திய வானொலிக்கு ரிப்ளை கார்டு எழுதியிருந்தேன். She is female என பள்ளி முகவரிக்கு பதில் வந்துதலைமை ஆசிரியர் புலவர். தங்கவேல் என்னை அழைத்து விசாரித்தார்.

டெல்லியில் இருந்து வானொலியில் ஒலிபரப்பாகும் தமிழ் செய்தியில் மூன்றாவது தலைப்புச் செய்தியாக எப்போதும் ஈழம் பற்றிய செய்தி இருக்கும். “புலிகள் தாக்கியதில் நான்கு இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் , “ராணுவ ஹெலிக்காப்படர்கள் குண்டு வீசியதில் பள்ளிக்குழந்தைகள் கொல்லப்பட்டனர் போன்ற செய்திகள் என்னை அப்போது வெகுவாகப் பாதித்திருந்தது.

60-களில் இருந்து அப்பா தினமணி வாசகர். தினமணி நாள்தோறும் கண்ணில் படும். வானொலிப்பெட்டி மற்றும் தினமணி நாளிதழ் வாயிலாகத்தான் வெளிஉலகைப் பார்த்தேன்.

வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி அப்போது கிடையாது. எங்கள் இராஜாளிப்பட்டி கிராமத்திற்கே ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டிதான் இருந்தது. பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து பூட்டி வைத்திருப்பார்கள். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கும், ஞாயிற்றுக்கிழமை திரைப்படம் பார்ப்பதற்கும் 11 பட்டி கிராமமே திரண்டு வரும்.

அப்போது தினமணியில், நந்தன் பத்திரிக்கை தொடங்குவது பற்றிய விளம்பரம் வந்தது. அந்தப் பத்திரிக்கையின் செய்தியாளராக என்னை நியமிக்குமாறு நான் ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் கல்லூரி மாணவராக இருப்பதால் இந்தப் பணியை செய்ய இயலாது. நீங்கள் நந்தன் வாசகராக இருக்கலாம் என்று ஒரு பதில் கடிதம் நந்தன் அருணாசலம் அவர்களிடம் இருந்து வந்தது.

இளங்கலை முடிப்பதற்குள் எனது எண்ணமும் சிந்தனையும் முழுமையாக மாறியிருந்தது. ஆனாலும் பெற்றோர்களின் எண்ண ஓட்டத்திற்கு மாறாக நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

செய்திகள், கட்டுரைகள் என ஒரு பொதுத்தளத்திற்கு விரைந்து இழுக்கப்பட்டேன். நான் இளங்கலை மைக்ரோபயாலஜி படித்துக்கொண்டிருந்த காலத்தில், அந்தப் படிப்பிற்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக மருத்துவத்துறை, உணவுப் பதப்படுத்தும் துறை ஆகியவற்றில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருந்தது.

டிகிரி முடித்தவுடன் எம்.எஸ்.ஸி படித்தால் நல்ல வேலைக்குப் போய்விடலாம் என சக மாணவ, மாணவியர்கள் முடிவெடுத்து எந்தக் கல்லூரியில் சேர்வது என விவாதித்துக் கொண்டிருந்தபோது, என் மனம் மட்டும் வேறு துறையைப் பற்றியே சிந்தித்தது. அது நமது குடும்பப் பொருளாதாரத்திற்கு ஏற்றதாக இருக்குமா? என்ற கேள்வியும் என்னை உறங்கவிடாமல் செய்தது.

பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்று எழுந்த குழப்பத்தைவிட, டிகிரிக்குப் பிறகு என்ன செய்வது என்ற குழப்பம் சற்று அதிகமாகவே இருந்தது.

குழப்பம் என்பதைக்காட்டிலும், அப்பா அம்மாவின் கடுமையான உழைப்பை மேலும் காவு வாங்கிவிடக்கூடாது, அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனது குழப்பத்திற்குக் காரணமாயிற்று.

உடனடியாக வேலைக்குச் செல்லும் வகையான மேற்படிப்பா? அல்லது பொதுத் தளத்தில் இயங்குவதற்குத் தேவையான கல்வியா? என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தேன்.

இறுதியில் பொதுத் தளத்தில் இயங்குவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும், நமக்கு நாமே ஒரு பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். நான் தேர்ந்தெடுத்த பாதை சற்று சிரமமானது என்று தெரிந்தேதான் முடிவு எடுத்தேன். சக நண்பர்கள் எம்.எஸ்.சி மைக்ரோபயாலஜியில் சேர்ந்தபோது, நான் சட்டக்கல்லூரியில் சேர்வது என்று முடிவு செய்தேன். என்னை சார்ந்தவர்களுக்கு அது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாக இருந்தது.

அம்மாவும் அப்பாவும் சற்றுத் தயக்கத்துடனையே ஆமோதித்தார்கள். அதுவரை நான் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்ததில்லை. இதுதான் வேண்டும் என்று கேட்டதும் கிடையாது. சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் செய்து நுழைவுத்தேர்வையும் எழுதிவிட்டேன். முதலில் வெளியான தேர்வுப் பட்டியலில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. இரண்டு மாதம் கழித்து காத்திருப்போர் பட்டியலில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. மூன்றாண்டு சட்டப்படிப்பு. மதுரை சட்டக்கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

நானும் அப்பாவும் மதுரைக்குப் புறப்பட்டுப்போய்ச் சேர்கிறோம். மதுரை நகருக்குள் அப்போதுதான் முதல் முறையாக நுழைகிறேன். சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் சென்று சேர்ந்தபோதுஒரு மதிப்பு மிக்க இடத்திற்கு வந்தடைந்து விட்டதாகவே நினைத்துக்கொண்டேன். என்னைப்போலவே அங்கு இருந்த அனைவரும் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டதைப்போல முக மலர்ச்சியுடன் காணப்பட்டார்கள். வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

ஒரே ஒரு நோட்டை கையில் பிடித்துக்கொண்டு மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வருவதும் போவதுமாக இருந்ததைப் பார்த்தபோது மனம் சிறகடித்துப் பறந்தது. சேர்க்கைக்காக அலுவலக வாயிலில் நின்று கொண்டிருந்தேன். பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நாயர் சான்றிதழ்களை சரிபார்த்தார். சான்றிதழ்களை திருப்பித்திருப்பி பார்த்தார். என் முகத்தைப் பார்த்துஎதுக்காக லா காலேஜ் வந்தீங்க?, மைக்ரோபயாலஜி படித்துவிட்டு இங்குதான் வரவேண்டுமா?’ என்றார். பதில் சொல்ல முடியாமல் விழித்து நின்றேன். அப்பாவின் முகம் சற்று மாறிவிட்டது.

எதற்காக அப்படிக் கேட்டார் என்பதற்கான அர்த்தம் எனக்கு அன்று புரியவே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக