கடைசிப் புகலிடமா?
- வழக்கறிஞர் ஆ. தமிழ்மணி
மூன்றாண்டு சட்டப்படிப்பிற்கான வகுப்புகள் மதியம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இராஜாளிப்பட்டி கிராமத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தூரம் பேருந்துப் பயணம். மாட்டுத்தாவணியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் கல்லூரிக்கு நடந்து போய் வந்து கொண்டிருந்தேன்.
“ஒவ்வொரு பாடத்திற்கும் டெக்ஸ்ட் புக் வாங்கிப் படித்தால் வழக்கறிஞராகப் பணிசெய்யும்போது பெரும் உதவியாக இருக்கும். கல்லூரியைவிட்டு வெளியே போய்விட்டால் டெக்ஸ்ட் புத்தகங்களைப் படிக்க நேரம் இருக்காது” என்று ஒவ்வொரு பேராசிரியரும் அறிவுறுத்தியிருந்தனர். தமிழில் புத்தகங்கள் கிடையாது என்பதால் பேராசிரியர்கள் பரிந்துரை செய்த ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிவிட்டேன். கையில் ஒரே ஒரு நோட்டுடன்தான் பலரும் வகுப்பிற்கு வந்தனர்.
ஆனால் பெரும்பாலான மாணவர்கள் புத்ததகங்கள் வாங்கவே இல்லை. தேர்வு வரும்போது சுஜாதா கைடையோ அல்லது ஜெயராஜன் தமிழ் கைடையோ படித்து தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாணவர்கள் அப்படித்தான் தேர்வு எழுதினார்கள்.
ஒரு மாதம் முடிந்திருந்தது. பேருந்துப் பயணம் சுமையாகத் தெரிந்தது. இரண்டாவது மாதம் தொடங்கும்போதே இடுப்பு வலி வந்துவிட்டது. தினமும் பேருந்து கட்டணம் செலவழிப்பது ஒரு சுமையாக இருந்தாலும், இடுப்பு வலி புதிய அச்சத்தை ஏற்படுத்தியது. திருச்சி மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையெல்லாம் கிடையாது. தினந்தோறும் பேருந்தில் பயணித்து வகுப்புக்குச் சென்று வருவது என்பது சிரமமாக இருந்தது. கல்லூரிக்குப் போகாமல் இருக்கவும் மனம் இடம் தரவில்லை.
அனைத்து வகுப்புகளுக்கும் வரவேண்டும் என்பதெல்லாம் கட்டாயம் இல்லாத சூழல்தான் இருந்தது. கல்லூரிக்கு வருபவர்களும் வெளியில் சுற்றிக்கொண்டுதான் இருந்தார்கள். வருகைப்பதிவேடு எடுக்கும் போது சாரியாக உள்ளே நுழைவார்கள். வராதவர்களுக்கும் பிராக்ஸி அட்டெண்டன்ஸ் கொடுப்பார்கள். இவை அனைத்தும் பேராசிரியர்களுக்கும் தெரியும்.
அந்த ஆண்டு தீபாவளிக்கு முதல்நாள் வழக்கம் போல கல்லூரிக்குச் சென்றேன். வகுப்பில் யாருமே இல்லை. ஒருவேளை விடுமுறை அறிவிக்கப்பட்டது தெரியாமல் இவ்வளவு தூரம் வந்துவிட்டோமோ? என்று முதல் மாடிக்குச் சென்று அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அப்படி எந்த அறிவிப்பும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று பணியாளரிடம் விசாரித்தேன். “இன்னைக்கெல்லாம் எதுக்கு சார் வர்றீங்க” என்று சொல்லிவிட்டு ஏதோ பேப்பர்களை புரட்டிக்கொண்டிருந்தார். போன அடி மாறாமல் திரும்பி ஊருக்கு வந்துவிட்டேன். எத்தனை நாளைக்கு இப்படி போய்வருவது.
விடுதியில் சேர்வது பற்றி நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அதுவரை வீட்டைவிட்டு வெளியில் தங்கிப் பழக்கமில்லாமல் இருந்தது. வேறு வழியின்றி, மதுரையில் இருந்து திருச்சி அரசு சட்டக்கல்லூரிக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்தேன். அதன் நகலை அப்பாவிடம் கொடுத்திருந்தேன். தலைமைச் செயலகத்தில் கால்நடைத்துறையில் பணியில் இருந்த தனது நண்பர் சீனிவாசனிடம் கல்லூரி மாறுதல் வேண்டும் என்று அப்பா சொல்லி வைத்திருந்தார்.
சீனிவாசன் அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்வார் என்று நான் கருதவில்லை. மாறுதல் கிடைத்தால் நல்லது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். 20 நாட்களுக்குள் மதுரை சட்டக் கல்லூரியில் இருந்து திருச்சி சட்டக்கல்லூரிக்கான மாறுதல் அளிக்கப்பட்டு எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மதுரை சட்டக்கல்லூரிக்கும் திருச்சி சட்டக்கல்லூரிக்கும் நிர்வாகத்தில் பெரிய மாறுதல் எல்லாம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. மணப்பாறை வழியாக தொடர்வண்டியில் திருச்சிக்கும், அங்கிருந்து கல்லுக்குழி ரயில்வே காலணி வழியாக சட்டக்கல்லூரிக்கும் சென்று வந்து கொண்டிருந்தேன். திருச்சியில் மூன்றாண்டு சட்டப்படிப்பிற்கான வகுப்புகள் காலையில் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள், வகுப்புப் புறக்கணிப்புகள், குழு மோதல்கள் என மூன்றாண்டுகளும் அமர்க்களப்பட்டிருந்தது.
எல்லா மாணவர்களும் அரசியல் வயப்பட்டிருந்தனர். வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது.
பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்கள் யாரும் “நான் சட்டக்கல்லூரியில் சேர்வேன்” என்று பேட்டி கொடுத்ததாக எந்தச் செய்தியையும் நான் பார்த்ததில்லை. அரசு சட்டக்கல்லூரிகள் மீது அந்த அளவிற்குத்தான் பொது மக்களிடம் மரியாதை இருந்தது.
மருத்துவம், பொறியியல் என்று எங்கும் இடம் கிடைக்காதவர்கள் அல்லது அவ்வாறு பெற்றோர் விரும்பியிருந்து அதற்கு வாய்ப்பில்லாமல் சட்டக்கல்லூரிக்கு வந்தவர்கள் என இப்படித்தான் பெரும்பாலான மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு வந்தனர். தேடியன கிடைக்காதவர்களின் புகழ் இடமாகவும், புகலிடமாகவும் சட்டக்கல்லூரி விளங்கியது.
சிலர் தனது குடும்பத்தில் உள்ள வழக்குகளை தீர்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையிலும், சிலர் அரசியலில் பிரகாசிக்க வேண்டும் என்றும், சிலர் தனது கொள்கைவழிப்பட்ட பணயத்தில் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும்தான் சட்டக்கல்லூரிக்கு வந்திருந்தனர். ஒன்றிரண்டு பேர் அப்பாவின் தொழிலைத் தொடர வேண்டி வந்திருந்தனர். சம்பாதித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் வந்ததாக நான் யாரையும் காணவில்லை.
சட்டக்கல்லூரியில் கற்றுக் கொண்டதற்கும் நடைமுறை நீதிமன்றப் பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல்தான் இருந்தது. இன்றைக்கு பி.எல். ஹானர்ஸ், நேசனல் லா ஸ்கூல் என வந்தபிறகு சட்டக்கல்லூரி மீதான பார்வையும் மதிப்பும் உயர்ந்திருக்கிறது. இங்கு படித்தால் உருப்படலாம் என பெற்றோர்களுக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது.
மருத்துவம் படித்துவிட்டு வெளியே வரும் ஒருவரால் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியும். பொறியியல் படித்த ஒரு பொறியாளரால் அவர் சார்ந்த வேலையைச் செய்துவிட முடியும். ஆனால் சட்டம்படித்து விட்டு வரும் ஒரு வழக்கறிஞரால் உடனடியாக ஒரு வழக்கை நீதிமன்றத்தில் சுயமாக முன்னெடுக்க முடியாது. சட்டக்கல்வி அதற்கான பயிற்சியைத் தரவில்லை.
வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு வெளியே வந்தவுடன் தனியாக ஒரு அலுவலகத்தைப் போட்டு உட்கார முதலில் தைரியம் வேண்டும். அப்படியே போட்டு உட்கார்ந்தாலும் யார் வழக்குக் கொடுப்பார்கள்? அப்படியே வழக்குக் கொடுத்தாலும் அதை எப்படி அணுக வேண்டும் என்பதெல்லாம் இளம் வழக்கறிஞர்களுக்குத் தெரியுமா? என்ற கேள்விகள் பிரதானமாக தொக்கி நிற்கின்றன. பத்தாண்டுகள் கடந்த வழக்கறிஞர்கள்கூட சுயமாக நிற்க முடியாத சோகங்கள்தான் தற்போதும் தொடர்கிறது.
மைக்ரோபயலாஜி படிக்கும் போது “அரியரிலர்லா மனிதன் அரை மனிதன்” என்று பேசிக்கொண்டு தேர்வு பயமே இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதுவதை பாத்திருக்கிறேன். அப்போதெல்லாம் இல்லாத பதட்டம் எனக்கு சட்டக்கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு எழுதும் போது வந்தது.
அரியர் விழுந்துவிட்டால் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள், அப்பா, அம்மா என்ன நினைப்பார்கள், உறவினர்கள் நண்பர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பதட்டம் எனக்கு சட்டக்கல்லூரி இறுதி ஆண்டு தேர்வறையில் வந்தது. அந்த பதட்டத்திலேயே தொழிலாளர் சட்டத்தில் எனக்கு அரியர் வந்துவிட்டது. ஆறுமாதம் தாமதமாகத்தான் நான் வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடிந்தது. எதையும் தைரியமாக அணுகினால் தான் வெற்றி கிடைக்கும் என்பதை நான் இங்கிருந்துதான் முதலில் கற்றுக்கொண்டேன்.
வழக்கறிஞராகப் பதிவு செய்தவுடன் திருச்சியில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ஆர்.ராஜீலு அவர்களிடம் இளம் வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது உரிமையியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் தொடர்பாக மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தனர். நீதிமன்றப்பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. நாடு முழுவதுக்குமான போராட்டமாக இருந்த போதிலும் திருச்சியில் போராட்டம் வீரியமாக நடைபெற்று வந்தது. வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்றெல்லாம் அறிவிப்பு அனுப்பப்பட்டிருந்தது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அதைப்போலத்தான் சீனியர் வழக்கறிஞர் அமைவதும். வாழ்வும் தாழ்வும் அங்கிருந்துதான் தொடங்குகிறது. வழக்கறிஞராகப் பதிவு செய்த நாளில் இருந்து வீட்டில் பணம் வாங்குவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். அலுவலகத்திலும் ஊதியம் என்றெல்லாம் ஒன்று இல்லை.
‘எதுக்காக சட்டக்கல்லூரிக்கு வந்தீங்க?, மைக்ரோபயாலஜி படித்துவிட்டு இங்குதான் வரவேண்டுமா?’ என்று மூன்றாண்டுகளுக்கு முன்பு சட்டக் கல்லூரியில் சேரும்போது, பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நாயர் கேட்ட கேள்விக்கான விடை வழக்கறிஞராக நீதிமன்றத்திற்குச் சென்றபோதுதான் எனக்குக் கிடைத்தது.
“வழிச்செலவுக்குக் காசில்லாமல் வழக்கற்றுப் போனவர்களின் கதை”யை சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். ஆனால் வழக்கறிஞருக்கே காசில்லாமல் போனால் என்ன செய்வது?.
எப்படியும் நின்று நிலைத்துவிட வேண்டும் என்ற உறுதியோடு, உடனடியாக ஒரு அலுவலகத்தை தொடங்குவது என்று முடிவு செய்திருந்தேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக