திங்கள், 21 அக்டோபர், 2024

கொஞ்சம் சட்டம்; கொஞ்சம் அனுபவம்-4

 



'இளம் வழக்குரைஞரும் வருமானமில்லாத வாழ்க்கையும்'

வழக்கறிஞர்  ஆ. தமிழ்மணி


பல நேரங்களில் இளம் வழக்கறிஞர்களுக்கு பெரும் உதவியாக இருப்பவர்கள் குமாஸ்தாக்கள். எளிமையாக அணுக முடியும். பல சந்தேகங்களுக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்கும். குமாஸ்தாக்களின் உதவி இளம் வழக்கறிஞர்களுக்கு மிகப்பெரிய வடிகாலாக இருக்கும். மூத்த வழக்கறிஞர்களிடம் பேசுவதற்கு தைரியம் வரவே நமக்கு பல மாதங்களாகிவிடும். நமக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டால், இதுகூடத் தெரியாமல் எப்படி படித்து வந்திருப்பாய் என்று கேட்டுவிடுவாரோ? கேட்காவிட்டாலும் மனதிற்குள் நினைத்துக்கொள்வாரோ? ஏன்றெல்லாம் நமது மனம் நம்மை அச்சுறுத்தும். மூத்த வழக்கறிஞரிடம் கேட்க வேண்டிய சந்தேகங்களைக் கேட்பதற்கு என நேரம் ஒதுக்கி, அதற்காக அவரது அலுவலகத்திற்குச் சென்று காத்திருந்து நாம் தெளிவு பெற வேண்டும். நடைமுறையில் இது அவ்வளவு சாத்தியம் இல்லை.

நான் இளம் வழக்கறிஞராக பணியில் சேர்ந்த காலத்தில் நீதிமன்றத்தில் என்னுடைய அணுகுமுறையைக் கவனித்த ஜெயராமன் என்ற குமாஸ்தா எனக்குப் பல உதவிகளைச் செய்திருக்கிறார். பல நேரங்களில் குமாஸ்தா ஜெயராமன் கடன் கொடுத்து உதவியிருக்கிறார். அந்தத் தருணங்களை எந்நாளும் மறக்க முடியாது.

மூத்த வழக்கறிஞர்கள் கே.ஜெயராமன், பி.ராமமூர்த்தி, பி.ஆர்.நமசிவாயம், எம். காந்திமதிநாதன், .சகாபுதின் ஆகியோரிடம் நான் வழக்குத் தொடர்பாக ஆலோசித்திருக்கிறேன். அவர்கள் பல்வேறு தருணங்களில் எனக்குப் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். எப்போதும் இன்முகம் காட்டக்கூடியவர்கள். அவர்களுக்கு நான் என்றும் நன்றிக்குறியவனாவேன். வழக்கறிஞர் ஆர்.செல்லமுத்து அழகான தமிழில் வாதங்களை வைக்கக்கூடியவர். தமிழிலும் சிறப்பாக வழக்கை நடத்த முடியும் என்பதற்கு முன் உதாரணமானவர்.

நாம் வணக்கம் வைத்தாலும் சில வழக்கறிஞர்கள் பதிலுக்கு வணக்கம்கூட வைக்க மாட்டார்கள். பல ஆண்டுகளாக நான் அப்படி வணக்கம் வைத்தும், பதிலுக்கு ஒருமுறை கூட வணக்கம் செய்யாத வழக்கறிஞர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து இளம் வழக்கறிஞர்கள் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அவர்களிடம் பயிற்சிக்குச் சேர்ந்த வழக்கறிஞர்களும் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.

வழக்கறிஞர் தொழிலில் பொன்விழா கொண்டாடிய மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ஆர்.ராஜீலு அவர்களுக்கு நான்தான் கடைசி ஜூனியர். வயோதிகத்தின் காரணமாக இரண்டு, மூன்று வருடங்களிலேயே அவர் வழக்கறிஞர் தொழிலில் இருந்து முழுமையாக ஓய்வெடுத்துக்கொண்டார். தொழில் ரீதியாக நான் அவரிடம் பெரிதாக எதுவும் கற்றுக்கொள்ள இயலவில்லை என்றாலும் எஸ்.ஆர்.ஆர். ராஜீலு ஜூனியர் என்ற அடையாளம் பல மூத்த வழக்கறிஞர்களிடம் எனக்கு ஒரு நன்மதிப்பைப் பெற்றுத்ததந்தது.

அப்படி அறிமுகம் ஆன வழக்கறிஞர்களில் குற்றவியல் துறையில் சிறப்பான இடத்தைப்பெற்றுள்ள மதுரம் அவர்களும் ஒருவர். நீதிமன்றங்களில் நான் சந்திக்கும்போதெல்லாம் இன்முகம் காட்டக்கூடியவர்.

சட்டக்கல்லூரியில் படிக்கும்போது பேராசிரியர்கள் எதற்காக டெக்ஸ்ட் புத்தகங்களை படிக்கச் சொன்னார்கள் என்பதை நான் உணரத் தொடங்கியிருந்தேன். திருச்சி சட்டக்கல்லூரிக்கு மாறுதலாகி வந்தவுடன், நானும் மற்ற மாணவர்களைப் போலவே கைடுக்கு மாறியிருந்தேன். அதன் பாதிப்புகள் வக்கீலாக வேலை செய்யும்போதுதான் தெரிந்தது. வழக்கறிஞராக வந்தவுடன் சீனியர் சொல்லும் வேலைகளைச் செய்ய வேண்டும். அதைத் தாண்டி அன்றாடத் தேவைகளுக்கான வருமானத்தை உருவாக்குவதற்காக கூடுதலாகச் சில வேலைகளைச் செய்ய வேண்டும். இதில் படிப்பதற்கான நேரம் மிகக் குறைவாகவே இருக்கும்.

படிப்பதற்கான மனநிலை இல்லாத அளவிற்கு ஒரு தொய்வு ஏற்பட்டுவிடும். இதனால் நாம் சந்திக்கும் வழக்குகளுக்கானத் தீர்வுகளை எட்டுவதற்கு தடுமாற வேண்டியிருக்கும். நீதிமன்றத்தில் நமது வாதத்தை அழுத்தமாக பதிவு செய்வதில் தடுமாற்றம் வரும். நமது வழக்கில் நமக்கே தெளிவு இல்லாமல் போய்விடும். புத்தகங்களை நன்கு படித்து தெளிவான மனநிலையில் இருந்தால் நாம் எளிமையாக வழக்குகளை எதிர்கொள்ள முடியும்.

வழக்குகளுக்கான தீர்வை எட்டுவதில் நமக்கு தடுமாற்றம் வந்தால், நாம் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோமா? என்றெல்லாம் திடீர் சந்தேகங்கள் வந்துவிடும்.

தேர்ந்தெடுத்த பாதை சற்று கடினமானதுதான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு ஓரளவு குடும்பப்பின்னனி இருந்தது. என்ன வருமானம் என்று என்னிடம் எனது பெற்றோர்கள் கேட்டதில்லை. நானும் எனது வருமானம் இது என்று அவர்களிடம் கொடுத்ததில்லை. நான் ஒருபோதும் பெற்றோர்களின் பணத்தை வீண் செய்ததில்லை. இதனால் அவர்கள் என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். நான் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பினார்கள். ஆனால், எதற்காக இவ்வளவு சிரமமப்பட வேண்டும் என சில நேரங்களில் அவர்கள் மனம் வருந்தியிருக்கிறார்கள்.

எல்லோருக்கும் அப்படியான குடும்பச் சூழல் இருக்குமா? என்றால் நிச்சயமாக இருக்க முடியாது. படித்துவிட்டு வழக்கறிஞராக தொழில் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு தினமும் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு, வெறும்கையோடு வீட்டிற்குச் சென்றால் என்ன செய்ய முடியும். குடும்பத்தேவைகளை அவர்கள் எப்படி சமாளிக்க முடியும்?.

ஒவ்வொருவரும் ஆயிரம் கனவுகளோடு சட்டக்கல்லூரிக்கு வந்திருப்பார்கள். வழக்கறிஞராக நீதிமன்றத்திற்கு வந்தவுடன் அந்தக் கனவுகளை கட்டிக்காத்து அதை நனவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. நீதிமன்றத்திற்கு வந்த ஓராண்டிற்குள்ளாகவே பலரது கனவுகள் தகர்ந்து சரிந்துவிடும். ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றுவிடலாம் என்று சிலர் முடிவெடுத்துவிடுவார்கள்.

கொஞ்சம் பேச்சுத் திறமை உள்ளவர்கள் முழுநேர அரசியலுக்குச் சென்றுவிடுவார்கள். என்னோடு வந்த நண்பர்கள் பலரும் அவ்வாறு முழுநேர அரசியலுக்குச் சென்றுவிட்டார்கள். இன்றைக்கு அதுவும் ஒரு தொழில்தானே?

சில நண்பர்கள் கருப்புச் சட்டையை மட்டும் நம்பி பயணில்லை காக்கிச் சட்டையை கொஞ்சம் அனுசரித்துப்போவோம் என்று முடிவெடுத்துச் சென்றுவிட்டார்கள். சில நண்பர்கள் நிதி நிறுவனங்களுக்கு சட்ட அதிகாரியாக பணியாற்றப் போய்விட்டார்கள். குறைந்த ஊதியத்தில் ஏராளமான உழைப்பை வழங்க இளம் வழக்கறிஞர்கள் எப்போதும் தயாராகவே இருப்பார்கள் என்பதை நிதி நிறுவனங்கள் நன்கு உணர்ந்திருந்தன.

நேரடியாக குற்றவியல் துறைக்கு செல்லும் இளம் வழக்கறிஞர்களுக்கு தினமும் ஓரளவு வருமானம் இருக்கும். அது அவர்களுக்கு போதுமானதாகவும் இருக்கும். ஆனால் சிவில் துறையில் இருப்பவர்களுக்கு அப்படி எந்த உத்தரவாதமும் இருக்காது. அவர்களுக்கு உள்ள ஒரே வருமானம் நீதிமன்ற ஆணையராக (Advocate commissioner) நியமிக்கப்பட்டால் கிடைக்கும் சிறிய தொகை மட்டுமே.

சிவில் வழக்குகளை நிரூபணம் செய்வதற்கு வழக்குச் சொத்தின் தற்போதைய நிலவரத்தை கண்டு அறிக்கை தாக்கல் செய்யும் வகையில், மனுக்கள் தாக்கல் செய்யப்படும். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்களை அனுமதிப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுமேயானால் அந்த நீதிமன்றத்திற்கு வருகைதரும் இளம் வழக்கறிஞர்களை அந்தக் குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்ற ஆணையராக நீதிபதியால் நியமனம் செய்யப்பட்டு ஒரு வாரண்ட் வழங்கப்படும். வாரண்டில் இருக்கும் பெயரைப் பார்த்தவுடன் ஏதே பெரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதைப்போல நம்மை அறியாமல் ஒரு சந்தோசம் வெளிப்படும். உண்மையில் அது பெரிய அங்கீகாரம்தான்.

அந்த வாரண்ட்டின் அடிப்படையில் வழக்குச் சொத்தை பார்வையிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்காக மனுதாரர் தரப்பில் இருந்து ஊதியம் வழங்கப்படும். 2004 களில் அந்தத் தொகையை ரூ.2000 மாக நீதிமன்றம் வழங்கிவந்தது. தற்போது அந்தத் தொகை ரூ.3000 அல்லது ரூ.5000 என வழக்கிற்கேற்ப நீதிமன்றத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வாய்ப்பு எல்லா வழக்கறிஞர்களுக்கும் கிடைக்குமா? என்றால் அப்படியெல்லாம் எந்த உறுதியும் இல்லை. மாதம் ஒருவாய்ப்பு அல்லது இரண்டு வாய்ப்பு கிடைத்தாலே அது பெரிய விசயமாக இருக்கும்.

தோட்டத்தில் விதைக்கப்படும் விதை உயிர்பெற்று வருவதற்குபொழ தண் என்று ஒன்று பாய்ச்சப்படும். “பொழ தண்ணி எவ்வளவு முக்கியம் என்பது விவசாயக் குடும்பத்தில் பிறந்த அனைவருக்கும் நன்றாகத் தெரியும். விதைத்த விதை உயிர்பெற்று முளைத்து வெளிவருவதற்கு மிக முக்கிய உயிர் ஆதாரம்பொழ தண்ணிர். உரிய நேரத்தில் பொழ தண்ணீர் பாய்ச்சாவிட்டால் அந்த விதை முளையிலேயே கருகிச் செத்துவிடும்.

பொழ தண்ணிரைப் போலத்தான் சிவில் நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு கமிசன் வாரண்ட்டுகள். அந்த வருமானத்தில் தான் அவர்கள் தன்னை பராமரித்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு வந்து செல்ல வேண்டும்.


 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக