வழக்கறிஞர் ஆ. தமிழ்மணி
வழக்கறிஞராகப் பதிவு செய்துவிட்டு மணப்பாறையில் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் அப்பாவின் நண்பரும், மூத்த வழக்கறிஞருமான அழகர் அவர்களைச் சந்தித்தேன். அவர்தான் என்னை திருச்சியில் உள்ள மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ஆர்.ராஜுலுவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
மாவட்ட நீதிமன்றம் என்பதால் அந்த வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் என பல பிரிவுகளாக நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன. நான் பயிற்சிக்காக சேர்ந்த அலுவலகம் சிவில் வழக்குகளை நடத்திவரும் அலுவலகமாக இருந்ததால் சிவில் வழக்குத் தொடர்புடைய எல்லா நீதிமன்றங்களுக்கும் சென்றுவரும் வாய்ப்பு கிடைத்தது. நான் மணப்பாறையில் இருந்திருந்தால் ஒரே ஒரு உரிமையியல் நீதிமனற்தில் தான் இருந்திருக்க முடியும். திருச்சிக்குச் சென்று வந்ததால் பல மூத்த வழக்கறிஞர்களின் வாதங்களையெல்லாம் கேட்கும் வாயப்பு எனக்குக் கிடைத்தது.
வழக்கறிஞர்களைப் பார்த்து பொதுவாகக் கேட்கப்படும் கேள்வி, நீங்க சிவிலா…? கிரிமினலா…?.
உரிமை சார்ந்த வழக்குகள் அனைத்தையும் சிவில் வழக்குகள் என்றும், குற்றம் சார்ந்த வழக்குகள் அனைத்தையும் கிரிமினல் வழக்குகள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. சிவில் வழக்குகள் உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் கீழும், கிரிமினல் வழக்குகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழும் இந்திய சாட்சியச் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது.
முப்பெரும் சட்டங்கள் என்று அழைக்கப்படும் உரிமையியல் நடைமுறைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றில் ஒருவர் நன்கு அனுபவம் பெற்றுவிட்டால் அவரால் எத்தகைய வழக்கையும் நடத்த முடியும். இந்த மூன்று சட்டங்களில்தான் வழக்கு நடைமுறைகள் அடங்கியுள்ளது.
சட்டம் என்பது கடலைப்போல பரந்து விரிந்தது. எல்லோரும் எல்லா சட்டங்களைப் பற்றியும் அறிந்திருக்க முடியாது. அது அவசியமும் இல்லை. கடலின் ஆழ அகலங்களைப் பற்றிய புரிதல் இருந்தாலே ஒருவரால் கடல் தொழில் செய்துவிட முடியும். அதைப்போலத்தான் ஒருவர் எல்லாச் சட்டங்களையும் அறிந்து தெளிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சட்டங்கள் பற்றிய அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும்.
வழக்கறிஞரிடம் ஒரு வழக்கைக் கொண்டு வரும் கட்சிக்காரர் என்ன வகையான சிக்கலில் இருக்கிறார். அவருக்கு எந்த வகையான தீர்வைத்தர முடியும். தற்போதைய சட்டங்கள் அவருக்கு எந்த வகையில் சாதகமாக இருக்கிறது. எதிர்தரப்பிற்கு எந்த வகையில் சட்டம் துணை நிற்கும் போன்ற விசயங்கள் எல்லாம் ஓரளவு தெரிந்திருந்தால்தான் நம்மைத் தேடி வரும் கட்சிக்காரர்களுக்கு நாம் தெளிவாக வழிகாட்ட முடியும்.
எல்லா வழக்குகளையும் நாமே நடத்திவிட முடியாது. அதற்கென நிபுணத்துவம் பெற்றவர்களின் ஆலோசணையை நாட வேண்டும். அல்லது அந்த வழக்கை அவர்கள் மூலமாக நடத்த வேண்டும். அப்போதுதான் நம்மை நம்பி வந்தவர்களுக்கு உதவ முடியும்.
உயர் நீதிமன்றங்களில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு வழக்கறிஞர் இருப்பார். அது அவர்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால் கீழமை நீதிமன்றங்களில் இது சாத்தியமா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கீழமை நீதிமன்றங்களைப் பொறுத்த அளவில் சிவில், கிரிமினல் என இரண்டு பிரிவாகத்தான் வழக்கறிஞர்கள் தொழில் செய்வார்கள். சிலர் இரண்டு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படி சிலரை நான் திருச்சி நீதிமன்றதில் பார்த்திருக்கிறேன். இது எனக்கு பெரிய நம்பிக்கையைத் தந்தது. நாமும் இரண்டு துறைகளிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.
புதிதாக வழக்கறிஞராக வருபவர்கள் சிவில் வழக்குகளில் குறைந்த பட்சம் ஐந்தாண்டுகளாவது கவனம் செலுத்தினால்தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக முடியும் என மூத்த வழக்கறிஞர் மதுரம் அவர்கள் ஒருமுறை என்னிடம் கூறியிருந்தார். சிவில் வழக்குகளில் பயிற்சி பெறும்போதுதான் குறுக்கு விசாரணையில் தெளிவு பெறமுடியும். குறுக்கு விசாரணையில் தெளிவு பெற்றுவிட்டால் குற்றவியல் வழக்குகளில் நாம் எளிதாக வெற்றிபெற முடியும் என அவர் என்னிடம் கூறியிருந்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது.
கிரிமினல் வழக்கு தொடர்பாக செல்லும் இளம் வழக்கறிஞர்களுக்கு நாள்தோறும் வருமானத்திற்கு உத்தரவாதம் உண்டு. சிவில் வழக்குகளில் முன்னிலையாகும் இளம் வழக்கறிஞர்களுக்கு அப்படி இல்லை.
‘வருமானம் இல்லாவிட்டாலும், சிவில் வழக்குகளில் பல வகைப்பட்ட வழக்குகளை நடத்தும் ஒரு மூத்த வழக்கறிஞரிடம் சேர்ந்து பயிற்சி பெறுவதுதான் ஒரு சிறந்த வழக்கறிஞராக வெளிவர உதவியாக இருக்கும். அன்றாடம் ஏதோ வருமானம் வருகிறது என்று கிரிமினல் வழக்குப் பக்கம் போய்விட்டால் அந்தப் பழக்கத்தையே தொடர நேர்ந்துவிடும். இதனால் பின்னர் எந்தத் துறையிலும் நாம் சிறப்பாக வழக்கு நடத்த முடியாமல் போய்விடும்’ என மூத்த வழக்கறிஞர்கள் பலரும் ஆலோசனை கூறியிருந்தனர். சிவில் வழக்குகளை தெரிந்து கொண்டு கிரிமினல் வழக்குகள் பக்கம் வந்தால் ஒரு சிறந்த வழக்கறிஞராக மிளிர முடியும் என மூத்த வழக்கறிஞர்கள் நம்பிக்கை அளித்திருந்தனர்.
சிவில் நீதிமன்றங்களில் பணிசெய்யும் இளம் வழக்கறிஞர்களின் வேலையே அன்றைய தினம் நீதிமன்றத்தில் அழைக்கப்படும் வழக்குகளை மூத்த வழக்கறிஞர்களின் உத்தரவுப்படி வாய்தா வாங்க வேண்டும் அல்லது அன்னறைய தினத்திற்காக வழக்குகளை ஒத்தி வைக்க வேண்டும். மீண்டும் அழைத்தால் மூத்த வழக்கறிஞர் வந்து கொண்டிருக்கிறார் என்றத் தகவலை நீதிபதியிடம் தெரிவித்து வழக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டி வலியுறுத்த வேண்டும். இதைத்தான் நானும் செய்து கொண்டிருந்தேன்.
Pray time your honour, some other date your honour, may be call on some other date your honour, may be call on next week your honour, may please….. your honour, call on tomorrow, course of the day your honour, one more chance your honour, pass over your honour இந்த வார்த்தைகள் தான் இளம் வழக்கறிஞர்கள் ஆரம்பத்தில் சிவில் நீதிமன்றத்தில் உச்சரிக்கும் வார்த்தைகளாக இருக்கும். பலருக்கு இது மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும். ஏனெனில் வழக்குகளின் முக்கியத்துவம் கருதி மூத்த வழக்கறிஞர்களே வாதத்தை முன்வைப்பார்கள். இளம் வழக்கறிஞர்களுக்கு அந்த வாய்ப்பெல்லாம் கிடைக்காது. மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பேசுவதையே கட்சிக்காரர்களும் விரும்புவார்கள்.
சில வேளைகளினல் மாண்புமிகு நீதிபதிகள் இளம் வழக்றிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மூத்த வழக்கறிஞர் இல்லாவிட்டால் என்ன நீங்களே பேசுங்கள் என்று ஊக்கப்படுத்துவார்கள். எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் இப்படியான வாய்ப்புக் கிடைக்காது.
இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை வழக்கறிஞர்களாக வருபவர்களுக்கெல்லாம் எந்தச் சிக்கலும் இருக்காது. அவர்களுக்கான கட்டமைப்பு ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதால் அவர்களால் எளிதாக தங்களது பணிகளைச் செய்துவிட முடியும். எல்லாச் சிக்களும் முதல் தலைமுறை வழக்கறிஞர்களுக்கு மட்டும்தான். அவர்களுக்கு என்று எந்த வழக்கும் வராது. வந்த வழக்குகளையும் எப்படித் தயார் செய்வது? அதை நீதிமன்றத்தில் எப்படித் தாக்கல் செய்து விசாரணைக்குக் கொண்டு வர வேண்டும?; என்பதற்கெல்லாம் யாரையாவது ஒருவரைச் சார்ந்திருக்க வேண்டும்.
நமது பெயரிலேயே வழக்கைத் தாக்கல் செய்தால் வழக்கு அன்றே கோப்பிற்கு எடுக்கப்படுமா? அப்படியே எடுத்துக்கொண்டாலும் இடைக்கால உத்தரவு கிடைக்குமா? வழக்கு கோப்பிற்கு எடுக்கப்படாமல் ரிட்டன் ஆகிவிட்டால் கட்சிக்காரர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்? அவருக்கு நாம் எப்படி பதில் சொல்வது? என்ற கேள்விகள் எல்லாம் நம் மனதை அரிக்கும். அந்தப் படபடப்பே பெரிய தலைவலியாக இருக்கும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்; 10.02.2005 இல் மணப்பாறையில் ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தைத் திறந்தேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக