திங்கள், 21 அக்டோபர், 2024

கொஞ்சம் சட்டம் ;கொஞ்சம் அனுபவம்-5






எனக்கான வாசல் திறந்தே இருந்தது.
- வழக்கறிஞர்  ஆ. தமிழ்மணி


கடந்த வாரம் எழுதியிருந்த நான்காவது பகுதியைப் படித்த இளம் வழக்கறிஞர்கள் பலரும் பல்வேறு உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். தங்களது இளமைக் காலத்தை நினைவு படுத்துவதாக மனம் உருகி நினைவு கூர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள். இந்தத் தொடரில் யாரையும் தாழ்வாகவோ அல்லது உயர்வாகவோ கூற வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. இந்தத் துறைக்கு வரும் இளம் தலைமுறை நம்பிக்கையோடு பயணப்பட வேண்டும். அதன் மூலம் இந்த நாட்டின் நீதிபரிபாலனம் மேலும் மேலும் வலுப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

இந்த நாட்டின் நிர்மானத்தில் வழக்கறிஞர்களின் பங்களிப்பு என்பது மகத்தானது. வழக்கறிஞர்களால் மட்டுமே இந்த நாட்டில் சமதர்ம சமுதாயத்தை கட்டமைக்க முடியும். சூழலியலைக் காக்க முடியும். எனவே பல திறமையான வழக்கறிஞர்கள் வர வேண்டியது தற்போதைய அவசியத் தேவையாக இருக்கிறது.

திசை தெரியாமல் தத்தளிக்கும் படகோட்டிக்கு திசையைக் காட்டிச் செல்லும் ஒரு சிறிய காகத்தைப்போல எனது அனுபவம் பயன்படும் என்ற நம்பிக்கை தான் இந்தத் தொடர்.

ஒரு நண்பர் பேசும்போது “நான் ஊரில் இருந்து திருச்சி வந்து செல்வதற்கு 17 ரூபாய் வேண்டும். ஒரு பத்து ரூபாய் தாளும், ஏழு ரூபாய் சில்லறையும் என் சட்டைப் பையில் இருக்கும். அதோடு தான் நான் நீதிமன்றத்திற்கு பயணப்பட்டு வருவேன். பேருந்தில் ஏறிய பிறகு எனக்கு ஒரு பயம் இருக்கும். அந்த பத்து ரூபாய் நோட்டு செல்லாது, வேற கொடுங்க என்று நடத்துனர் சொல்லி விட்டால் என்ன செய்து? என்ற அச்சம் சற்று நேரத்திற்கு என்னை ஆட்கொண்டிருக்கும். நடத்துனரிடம் பயணச்சீட்டை வாங்கி பையில் வைத்த பிறகுதான் எனக்கு உயிரே வரும். இப்படி எத்தனையோ நாட்களை கடந்து வந்திருக்கிறேன். சில நேரங்களில் பேருந்து நிலையத்திலேயே இந்தத் தாள் செல்லுமா செல்லாதா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்; சந்தேகமாக இருந்தால் அப்படியே திரும்பிப்போய்விடுவேன்” என்று அவர் தனது கடந்த காலத்தை பற்றிக் கூறக்கேட்ட அந்த நொடியின் வலி தற்போதும் என்னை விட்ட அகல மறுக்கிறது.

நீதிமன்றதிற்கு வந்துவிட்டால் எப்படியும் குமாஸ்தாக்களிடம் கடன் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையிலேயே நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறார். அவருடைய விடா முயற்சி, வைராக்கியம் எல்லாம் அவரை இன்றைக்கு நல்ல நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
மாவட்ட நீதிமன்றத்தில் இருப்பவர்கள்தான் இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள் என்றெல்லாம் கிடையாது. வழக்கறிஞராகப் பதிவு செய்த கையோடு சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற பல நண்பர்களும் இதைப்போலவே பல இன்னல்களைச் சந்தித்திருக்கின்றனர்.

ஒரு நண்பர், அதிகாலையில் இந்து ஆங்கில செய்தித் தாள்களை வீடுகளுக்குப் போடும் வேலை செய்துவிட்டு, பிறகு நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார். சென்னையில் தங்கியிருப்பவர்களுக்கு அறை வாடகை, உணவு என பல விசயங்கள் சவாலாக இருக்கும். அதை சமாளித்தாக வேண்டுமே?.

வழக்கறிஞர்களுக்கு என்று ஒரு அறம் இருக்கிறது. அந்த அறத்திற்கு அப்பாற்பட்டு அந்த நண்பர் எப்போதும் செயல்பட்டதும் இல்லை. சிந்தித்ததும் இல்லை. காலையில் செய்தித்தாள் விநியோகம், பகலில் நீதிமன்றம், மாலையில் அலுவலகம், இரவில் படிப்பது என்ற தீவிரமாக இயங்கிய அந்த நபர் இன்றைக்கு நீதித்துறையில் மிக உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

“கையில் எவ்வளவு காசு இருக்குனு யோசித்து யோசித்து இட்லியை எண்ணிச் சாப்பிட்ட காலம் போய், இன்றைக்கு கை நிறைய காசு இருக்கிறது, ஆனால் சாப்பிட முடியவில்லை. சாப்பிட முடியாத அளவிற்கு வயிறு சுருங்கிப் போய்விட்டது” என்று அவர் இயல்பாகக் கூறியதில் எவ்வளவோ ஆழமான காயங்கள் புதைந்து கிடக்கிறது.

ஒருவருக்கு இளமைக்காலம் என்பது அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான காலக்கட்டம். விரும்பியதைச் சாப்பிட்டு, விரும்பிய இடத்தைச் சுற்றிப்பார்த்து குதூகளிக்கும் காலம்.

முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் பெரும்பாலும் தங்களது இளமைக்காலத்தை தியாகம் செய்துதான் நிலைத்து நிற்கிறார்கள். அவர்களது தியாகத்திற்கு விலையே கிடையாது.

இவ்வளவு சிரமப்பட்டு இந்தத் துறையில் பயணப்பட வேண்டுமா? என்றெல்லாம் பல கேள்விகள் வரும். எந்த நோக்கத்திற்காக சட்டக்கல்லூரிக்கு வந்தார்களோ? அதுதான் அவர்களைப் பயணப்பட வைக்கிறது. அவர்கள் தான் இந்த சமூகத்தின் உயர்விற்காகப் பல முனைகளிலும் அயராது போராடி வருகிறார்கள். இப்படியான பல கட்டங்களைக் கடந்து வந்தவர்களால் தான் இந்திய நீதித்துறையின் மனசாட்சியும் நம்பிக்கையும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

குறைந்த பட்சம் ஐந்தாண்டுகளாவது சிவில் நீதிமன்றத்தில் நன்கு பயிற்சி எடுத்த பிறகு, குற்றவியல் நீதிமன்றங்கள் பக்கம் வந்து கொள்ளலாம் என்று நான் தீர்க்கமாக முடிவு செய்திருந்த போதிலும், எனக்கான முதல் வருமானம் குற்றவியல் நீதிமன்றத்தைச் சார்ந்துதான் இருந்தது.

2004 களில் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் கொடிகட்டிப்பறந்த காலம். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அப்போது கள்ளச்சாராய வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதாக எனது நண்பர் சிதம்பரம் வந்து சொன்னார். மேலும் அவருக்கான பிணை மனுவையும் நான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்காக எவ்வளவு பீஸ் வாங்குவது என்பதையெல்லாம் நான் சிந்தித்து சொல்வதற்குள் அவரே தொகையையும் நிர்ணயம் செய்து கொண்டு வந்துவிட்டார்.

இதுதான் கட்டணம் என்று எப்படித் தெரியும் என்று நான் கேட்டவுடன் “அவரு எப்போதும் 1500 ரூபாய் கொடுப்பாராம், அதைவிட குறைவாக என் பிரண்டு எடுத்துவிடுவாரு’ என்று , நான் உங்க பெயரைச் சொல்லி 1200 வாங்கி வந்திருக்கிறேன் என்று விளக்கமும் சொன்னார். தவணை முறையில் சிறைக்குப் போவதும் பிறகு வெளியில் வந்து உரிய கவனிப்புடன் சாராயம் காய்ச்சுவதும் வழக்கமான நடைமுறை என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.

முதல் வழக்காயிற்றே என்று ஆவலுடன் புரொகிபிசன் ஆக்ட் புத்தகத்தையும் வாங்கிப் பார்த்தேன். பிணை மனு எப்படித் தாக்கல் செய்வது அதனுடன் என்னென்ன இணைப்பது என்பதெல்லாம் கல்லூரிக்காலங்களில் எதுவும் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்பதால் நீதிமன்றம் எதிரில் உள்ள ஒரு தட்டச்சரை சந்தித்து பிணை மனுவை தயாரித்துவிட்டேன். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மூன்றாவது நாளில் விசாரணைக்கு வந்தது.

சாராய வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் போது எத்தனை லிட்டர் வைத்திருந்ததாக புகார் பதிவு செய்யப்படுகிறதோ அதற்கேற்ப 15 நாள் 30 நாள் என ஒரு கால வரையறை நிர்ணயம் செய்யப்பட்டு அந்த நாளுக்குப் பிறகுதான் பிணை வழங்கும் நடை முறை இருந்து வந்தது. இதனால் என்னுடைய பிணை மனுவும் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

ஒரு வழியாக நான்கு முறை புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்குச் சென்று பிணை உத்தரவு வாங்கியவுடன் அதை நிறைவேற்றுவதற்கு கீரனூர் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு முன்பு நான் கீரனூர் நீதிமன்றம் பக்கம் போனது இல்லை.
பிணை உத்தரவுடன் என்னென்ன தகவல்களை இணைக்க வேண்டும் என்பது குறித்தும் எனக்குத் தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தது. ஒரு நபருக்கு இரண்டு நபர்கள் பிரமாண வாக்குமூலத்துடன் சொத்து குறித்த விவரங்களையும் தயார் செய்ய வேண்டியிருந்தது. என்னைவிட வழக்கைக் கொடுத்தவர்களே அதற்கான பேப்பர்களை எல்லாம் தயார் செய்து வைத்திருந்தனர். அவர்களுக்கு அதில் நல்ல அனுபவம் இருந்தது. அவர்களுக்குத் தேவை நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்ல ஒரு வழக்கறிஞர்.

இதே போல மாதம் ஒன்றிரண்டு வழக்குகள் எனக்கு வந்தன. பிணை மனுக்களில் கிடைத்த தொகைதான் நான் திருச்சி நீதிமன்றம் சென்று வர பேருதவியாக இருந்தது. என் சக நண்பர்கள் சிலரும் திருச்சி நீதிமன்றத்திற்கு வந்து, சென்று கொண்டிருந்தனர். எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்களுக்கான மதிய உணவை பகிர்ந்து கொள்வதுதான் நான் அவர்களுக்குச் செய்யும் உதவியாக இருந்தது.

சிவில் நீதிமன்றத்தில் பயிற்சி பெற வேண்டும் என தேர்வு செய்தது திருச்சி மாவட்ட நீதிமன்றம். ஆனால் எனக்கான வருமானம் என்பது எனது கிராமத்தைச் சார்ந்த, எனது மாவட்டமான புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கே செல்ல வேண்டியிருந்தது.
நான் அலுவலகம் திறப்பது என்று முடிவெடுத்து அதற்கான பணிகளில் ஈடுபட்ட போது அது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி ஒருவருடத்திற்குள் அலுவலகம் திறந்தால் யார் உங்களுக்கு கேஸ் கொடுப்பார்கள்? என்று ஒரு பயத்தை உண்டாக்கினார்கள். எது நடந்தாலென்ன என்ற முடிவுடன் மணப்பாறையில் ஒரு அலுவலகத்தை திறந்துவிட்டேன்.

எனது பெற்றோர்களுக்கு அது தயக்கமாக இருந்தாலும், அலுவலகத்திற்குத் தேவையான மேஜை நாற்காலிகளை எல்லாம் அவர்களே வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். வீட்டில் உதவி கேட்பதில்லை என்ற நிலைப்பாட்டை இதில் மட்டும் சற்றுத் தளர்த்தியிருந்தேன். அம்மா தான் அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.

அலுவலகம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்ததால் முகம் அறியாத பலரும் வந்தார்கள். ஆலோசனை கேட்பார்கள், சென்றுவிடுவார்கள். அந்த வழக்கறிஞரிடம் வழக்கைக் கொடுத்துள்ளேன். அந்த வழக்கில் முடிவு எப்படி இருக்கும் என்றெல்லாம் பலர் கேட்டிருக்கிறார்கள். நம்மையும் தேடி வந்து விளக்கம் கேட்கிறார்களே என்று நானும் அவர்களுடன் பல மணிநேரம் பேசியிருக்கிறேன். சில நாட்களில் வழக்குகளும் வந்தது.

பொதுத் தளத்தில் நான் இயங்கி வந்ததால், எனக்கான பணத் தேவை என்பது அதிகரித்துக் கொண்டே வந்தது. இதற்கான தேவைகளை ஈடு செய்ய, போட்டித் தேர்வகளுக்கான ஒரு பயிற்சி மையத்தையும் நடத்தத் தொடங்கினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக